ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண்ணிற்கு, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் மெசேஜ் அனுப்பி ஆன்லைனில் தொந்தரவு செய்துவந்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நபரை ஹைதரபாத் ரச்சகொண்டா காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ரச்சகொண்டா குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் (DCP) அனுராதா மற்றும் உதவி போலீஸ் கமிஷனர் (ACP) வெங்கடேஸ்வரலு நரேந்திர கவுட் ஆகியோர் கூறுகையில், “பேஸ்புக்கில் அப்பெண்ணிற்கு அறிமுகமான நபர் அவரது செல்போனை ஹேக் செய்து, அதில் இருந்து அவரது தனிப்பட்ட புகைப்படங்களை சேகரித்து, ஆபாசமான பதிவுகள் மற்றும் மெசேஜ் மூலம் அப்பெண்ணை துன்புறுத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான மோகித் பிரதாப் சிங் குஷ்வாஹா கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்” என தெரிவித்தனர்.
தொடர்ந்து இது குறித்து டிசிபி அனுராதா கூறுகையில், “மோகித் பிரதாப் சிங் குஷ்வாஹா பி.பார்மசி முடித்துள்ளார். 2018 ஆம் ஆண்டில், தெலங்கானாவில் உள்ள மேட்சல் மாவட்டத்தின் வசிக்கும் பெண்ணிற்கு ஆர்யன் குஷ் என்ற பெயரில் போலி பேஸ்புக் கணக்கு மூலம் இவர் அறிமுகமாகி உள்ளார். அப்பெண் முன்பு உத்தர பிரதேசத்தின் பரேலியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து உள்ளார். அதை அறிந்த அந்த இளைஞர் அவரும் அங்கு தான் படித்ததாக கூறி அப்பெண்ணிடம் பழகத் தொடங்கியுள்ளார்.
யூடியூப் மூலம் செல்போன்களை ஹேக் செய்வது எப்படி என்று கற்றுக்கொண்ட மோகித் பிரதாப் சிங் குஷ்வாஹா பின்னர் அப்பெண்ணின் செல்போனை ஹேக் செய்து உள்ளார். பின்னர் அந்த செல்போனில் இருந்து பெண்ணின் தனிப்பட்ட புகைப்படங்கள், செல்போன் எண்களை சேகரித்துள்ளார். தொடர்ந்து, அப்பெண்ணை வீடியோ காலில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்துள்ளார்.