கோவா மாநிலத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், புதிய சக்தியான ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் வெற்றி முனைப்புடன் களமிறங்குகின்றன.
தேர்தலுக்கான உத்தேச வேட்பாளர் பட்டியல் குறித்த தகவல்கள் தற்போது வெளிவர தொடங்கியுள்ளது. பாஜகவின் மாநில தேர்தல் பொறுப்பாளரான தேவேந்திர பட்னாவிஸ் இது குறித்து கூறிய கருத்து மாநில பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவின் பானாஜி தொகுதி கடந்த 30 ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக உள்ளது. இந்த தொகுதியில் நீண்டகாலமாக மூத்த பாஜக தலைவரும், கோவா மாநில முன்னாள் முதலமைச்சருமான மனோகர் பாரிக்கர் வெற்றி வீரராக திகழ்ந்துள்ளார்.
2019ஆம் ஆண்டு மனோகர் பாரிக்கரின் மரணத்திற்குப் பின், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அடான்சியோ என்பவர் வெற்றிபெற்றார். ஆனால் வெற்றிக்குப் பின் அவர் பாஜகவில் இணைந்துகொண்டார்.