மும்பை: ஹரியானா டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை மத்திய அரசு கையாளும் முறையை கண்டித்துள்ள சிவசேனா கட்சி, குளிர்காலத்தில், விவாசயிகள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடிப்பது கொடுமையான ஒன்று எனவும் கூறியுள்ளது.
நிபந்தனையுடன் கூடிய எந்த ஒரு பேச்சுவார்த்தைக்கும் தயார் இல்லை என்று தெரிவித்து, புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் கடந்த ஐந்து நாள்களாக விவசாயிகள் போராடிவருகின்றனர்.
"காஷ்மீரில் பயங்கரவாதிகள் நம்முடைய ராணுவ வீரர்களைக் கொல்லும் சூழ்நிலையில், டெல்லி எல்லையில் விவசாயிகள் பயங்கரவாதிகளைப் போல் பார்க்கப்பட்டுத் தாக்கப்படுகிறார்கள்" என சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழ் சாம்னா தலையங்கம் தீட்டியுள்ளது.
மேலும், அந்தத் தலையங்கத்தில், பாஜக அராஜகத்தை உருவாக்க விரும்புவதாகவும், காலிஸ்தான் ஒரு முடிந்துபோன விஷயம்; அதற்காக இந்திரா காந்தியும் ஜெனரல் அருண்குமார் வைத்யாவும் தங்களது உயிரைத் தியாகம் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.