வாஷிங்டான்: பிரதமர் மோடி அவதூறு கருத்து குறித்த ராகுல் காந்தியின் வழக்கை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செய்தி தொடபாளர் வேதாந்த் படேல் தெரிவித்து உள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடாக மாநிலம் கோலாரில் நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டார்.
“நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவருக்கும் எப்படி ஒரே பெயராக இருக்க முடியும்? எப்படி அனைத்து திருடர்களும் மோடி என்ற இணை பெயரோடு இருக்க முடியும்?” என ராகுல் காந்தி பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி, மோடி குடும்பத்தாரின் சமூக மரியாதை மற்றும் பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி ராகுல் காந்தி மீது வழக்குத் தொடர்ந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என சூரத் நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய ஏதுவாக ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், தீர்ப்பை நிறுத்தி வைத்தது.
நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கொள் காட்டி, ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டது. மேலும் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சி சார்பில் "சங்கல்ப் சத்தியாகிரக" போராட்டம் அறிவிக்கப்பட்டது.