டெல்லி : 2024ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் பைடன் கலந்து கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளதாக கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கான அமெரிக்கா தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்து இருந்தார்.
குடியரசுத் தினத்தை தொடர்ந்து ஜனவரி 27ஆம் தேதி இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய உறுப்பினர்களை கொண்ட குவாட் அமைப்பின் உச்சி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விட்டு குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் பைடன் திட்டமி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜனவரி மாதம் நடத்த திட்டமிட்டு இருந்த குவாட் உச்சி மாநாடு தேதி மாற்றப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாநாட்டுக்கான தேதி முடிவு செய்யப்படாத நிலையில், விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. குவாட் உச்சி மாநாடு தேதி தள்ளிப் போனதால், குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் பைடன் கலந்து கொள்வது சந்தேகம் தான் எனக் கூறப்படுகிறது.