டெல்லி: தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு செப்டம்பர் 9ஆம் தேதி துவங்கி 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா தலைமையில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஜப்பான், வங்காளதேசம் என பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். உச்சிமாநாட்டின் முதல் நாளில், பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
மாநாட்டின் முதல் நாளில் முக்கிய அம்சமாக டெல்லி ஜி20 கூட்டுப்பிரகடனம் வெளியிடப்பட்டது. இந்த பிரகடனத்தை. ஜி20 அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் ஒருமித்த கருத்துடன் ஏற்றுக்கொண்டு உள்ளன. கூட்டுப்பிரகடனத்தில் ரஷ்யா -உக்ரைன் போர் விவகாரம் குறித்தும் இடம்பெற்று இருந்தது. ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பான, மிகவும் மென்மையான கருத்துக்களே, இந்த கூட்டுப் பிரகடனத்தில் இடம்பெற்று இருந்த காரணத்தினால், ரஷ்யா, இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்கள், ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 10ஆம் தேதி) காலை, ராஜ்காட் பகுதியில் அமைந்து உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.