டெல்லி:மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இன்று (பிப்ரவரி 3) மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் பின்வருவன குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அந்த வகையில் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையை மார்ச் 31, 2023ஆம் ஆண்டு வரை நீட்டித்துள்ளது. 2022ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான நிதியாண்டில் 59.7 பில்லியன் டாலர்கள் மதிப்பில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. இந்த வர்த்தகம் வரும் நிதியாண்டில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனடிப்படையில் இந்தியாவின் சிறந்த ஏற்றுமதி நாடாக அமெரிக்கா உள்ளது. மொத்த சரக்கு ஏற்றுமதியைப் பொறுத்தவரை, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 23.31 பில்லியன் டாலர் மதிப்பிலும், நெதர்லாந்துக்கு 14.1 பில்லியன் டாலர் மதிப்பிலும், சீனாவுக்கு 11 பில்லியன் டாலர் மதிப்பிலும், சிங்கப்பூர் மற்றும் வங்க தேசத்துக்கு தலா 9 பில்லியன் டாலர் மதிப்பிலும் ஏற்றுமதி நடந்துள்ளது.