வாஷிங்டன்:காலநிலை மாற்றத்திற்கான அமெரிக்க தூதர் ஜான் கெர்ரி, கடந்த வாரம் சீனா சென்றிருந்தார். கடந்த 16ஆம் தேதி பெய்ஜிங் நகருக்கு சென்ற கெர்ரி, சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சீனாவின் மூத்த காலநிலை தூதர் ஜீ சென்ஹூவா உள்ளிட்ட பலருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், மீத்தேன் உமிழ்வைக் குறைத்தல், நிலக்கரிக்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துதல், காடுகள் அழிப்பை தடுத்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், இந்த சந்திப்பில் ஒப்பந்தங்கள் ஏதும் கையெழுத்தாகவில்லை.
இந்த நிலையில், சீனப் பயணத்தை முடித்துக் கொண்ட ஜான் கெர்ரி, ஐந்து நாட்கள் பயணமாக இன்று(ஜூலை 25) இந்தியா வருகிறார். இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரையிலான இந்த பயணத்தில், கெர்ரி, டெல்லி மற்றும் சென்னைக்கு சென்று அரசு அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். கெர்ரியின் இந்த பயணத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி மற்றும் சேமிப்பு தொடர்பான திட்டங்களில் முதலீடு செய்வதை ஊக்குவித்தல், கார்பன் உமிழ்வு இல்லாத பேருந்துகள் பயன்பாட்டை ஊக்குவித்தல், எரிசக்தி விநியோக சங்கிலிகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட காலநிலை மாற்றம் தொடர்பான பல்வேறு நோக்கங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.