டெல்லி: கடந்த வாரம் பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு, மீறல் குறித்து விசாரணை நடத்தக் கோரிய மனு மீதான விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் இது குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த விசாரணைக்கு முன்னதாக, சில உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான 'நீதிக்கான சீக்கியர்கள்' அமைப்பிடமிருந்து அழைப்பு வந்தது. அதில் ஃபெரோஸ்பூரில் பிரதமரின் வாகன பாதுகாப்பு வளைய அணிவகுப்பில் ஏற்பட்ட குறைபாட்டிற்கு முழுப் பொறுப்பையும் தாங்கள் ஏற்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சீக்கியர்களுக்கு அநீதிகள்
'இது நீதிக்கான சீக்கியர் பொதுக்குழுவின் அமெரிக்காவிடமிருந்து வந்த செய்தி, பஞ்சாபில் மோடியைத் தடுப்பதற்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம்' என்று அழைப்பில் பேசிய நபர் அறிவித்தார். மேலும், அந்த அழைப்பில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம், 'மோடி ஆட்சிக்கு உதவ வேண்டாம் - பஞ்சாப் சீக்கிய உழவர்கள் இறந்ததற்கு பிரதமர் மோடியின் கட்சிக்கு எதிராக வழக்குப் பதிய வேண்டும்' என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.