டெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா கடந்த வியாழக்கிழமை (பிப். 24) போரை தொடங்கியது. தொடர்ந்து தாக்குதல் நடந்து வரும் நிலையில், ஏழாம் நாளான இன்றும் (மார்ச் 2) நாட்டின் முக்கிய நகரங்களில் ரஷ்யப் படைகள் முன்னேறி வருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் நாட்டின் இந்தியத் தூதரகம் இன்று மாலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,"கார்கீவ் தலைநகரில் வசிக்கும் இந்தியர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக உடனடியாக அங்கிருந்து வெளியேறவும்.
அருகில் இருக்கும் பெசோச்சின், பாபே மற்றும் பெஸ்லியுடோவ்கா ஆகிய நகரங்களுக்கு விரைவாக செல்லுங்கள். எந்த சூழ்நிலையாக இருந்தாலும், இன்று மாலை 6 மணிக்குள் அங்கு சென்றுவிடுங்கள்" என அறிவுறுத்தியுள்ளது.
சிறிதுநேரத்தில், தூதரகம் வெளியிட்டுள்ள மற்றொரு ட்விட்டில்,"பெசோச்சின் (16 கி.மீ), பாபே (12 கி.மீ), பெஸ்லியுடோவ்கா (11 கி.மீ) ஆகிய நகரங்களுக்குச் செல்ல மாணவர்கள் ரயில், பேருந்து அல்லது வேறு எந்த வாகன உதவியும் கிடைக்காதப்பட்சத்தில் நடந்தாவது கார்கீவ் நகரிலிருந்து மாலை 6 மணிக்குள் (உக்ரைன் நேரப்படி) வெளியேறவும்" எனத் தெரிவித்துள்ளது.
இதேபோன்று, தலைநகர் கீவ்விலிருந்தும் உடனடியாக வெளியேறும்படி இந்தியத் தூதரகம் நேற்று (மார்ச் 1) அறிவித்திருந்தது. இதையடுத்து, கீவ் நகரில் இருந்த இந்தியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுவிட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிசெய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'பேச்சுவார்த்தைக்கு நாங்க தயார்' - ரஷ்யா அறிவிப்பு