டெல்லி:ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளை ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய மூன்று நிலைகளில் இந்த தேர்வை யுபிஎஸ்சி(UPSC) நடத்துகிறது.
அந்த வகையில், 2022ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ் உள்ளிட்ட 1,022 பணி இடங்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்பட்டது. முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி நடத்தப்பட்டது. முதன்மைத் தேர்வுகள் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றன. இதில், 2,529 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று(மே.23) வெளியிடப்பட்டுள்ளன. upsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 2022 யுபிஎஸ்சி தேர்வில் 933 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் தேசிய அளவில் முதல் நான்கு இடங்களை பெண்கள் கைப்பற்றியுள்ளனர். இஷிதா கிஷோர் என்பவர் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். கரீமா லோஹியா என்ற இளம்பெண் இரண்டாவது இடத்தையும், உமா ஹாரதி என்பவர் மூன்றாவது இடத்தையும், ஸ்மிருதி மிஸ்ரா என்பவர் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இதில் இஷிதா கிஷோர், கரீமா லோஹியா, ஸ்மிருதி மிஸ்ரா ஆகியோர் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள். முதலிடம் பிடித்த இஷிதா கிஷோர் டெல்லி பல்கலைக்கழகத்துக்குட்பட்ட ஸ்ரீராம் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். இரண்டாம் இடம் பிடித்த கரீமா லோஹியா டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கிரோரிமல் கல்லூரியில் வணிகவியலில் பட்டம் பெற்றவர். மூன்றாம் இடம் பிடித்த உமா ஹாரதி ஹைதராபாத் ஐஐடியில் கட்டுமானப் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர். நான்காம் இடம் பிடித்த ஸ்மிருதி மிஸ்ரா டெல்லி பல்கலைக்கழகத்துக்குட்பட்ட மிராண்டா ஹவுஸ் கல்லூரியில் பிஎஸ்சி பட்டம் பெற்றுள்ளார்.
யுபிஎஸ்சி தேர்வில் முதல் மூன்று இடங்களை பெண்கள் கைப்பற்றியிருப்பது இது இரண்டாவது முறையாகும். கடந்த 2021ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெண்கள் கைப்பற்றியிருந்தனர். ஸ்ருதி ஷர்மா, அங்கிதா அகர்வால் மற்றும் காமினி சிங்லா ஆகியோர் முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்திருந்தனர்.
2022ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள்படி, தேர்ச்சி பெற்ற 933 பேரில், 613 பேர் ஆண்கள், 320 பேர் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் 25 இடங்களில், 14 பெண்கள் மற்றும் 11 ஆண்கள் இடம்பெற்றுள்ளனர்.
முதல் 25 இடங்களைப் பிடித்தவர்கள், தங்களது முதன்மை எழுத்துத் தேர்வில், வணிகவியல் மற்றும் கணக்கியல், பொருளாதாரம், மானுடவியல், மின் பொறியியல், சட்டம், வரலாறு, கணிதம், அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள், சமூகவியல், விலங்கியல் போன்ற பாடப்பிரிவுகளை விருப்பப்பாடமாக தேர்வு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 39 பேர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: கூகுள் லொகேஷன் பேட்ஜ் பின் பெற்ற உலகின் 2ஆவது நபர் - சாமானிய இளைஞரின் வெற்றிக்கதை!