டெல்லி:இந்திய நிர்வாக அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் யுபிஎஸ்சி என்ற சிவில் சர்வீசஸ் தேர்வின் மூலம் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகின்றன. அதேநேரம், இந்த தேர்வானது முதல்நிலைத் தேர்வு (preliminary), முதன்மைத் தேர்வு (main) மற்றும் நேர்முகத் தேர்வு என 3 பகுதிகளாக நடத்தப்படுகிறது.
அந்த வகையில், யுபிஎஸ்சி 2022இன் முதல்நிலைத் தேர்வானது, கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்விற்கு 11 லட்சத்து 35 ஆயிரத்து 697 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 5 லட்சத்து 73 ஆயிரத்து 735 பேர் தேர்வெழுதினர். இதில், 13 ஆயிரத்து 90 பேர் தேர்வாகி, முதன்மைத் தேர்வை கடந்த செப்டம்பரில் எழுதினர்.
இந்தத் தேர்வு முடிவுகள் நேற்று (மே 23) வெளியானது. இதில் 2 ஆயிரத்து 529 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில், இஷிதா கிஷோர் ( Ishita Kishore) தேசிய அளவில் முதல் இடம் பிடித்துள்ளார். இந்தத் தேர்வினை அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள் என்ற பாடத் திட்டத்தினை தேர்வு செய்ததன் மூலம் தேர்ச்சி பெற்றுள்ளார், இஷிதா.
இவர், டெல்லி பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஸ்ரீ ராம் காலேஜ் ஆஃப் காமர்ஸ் கல்லூரியில் 2017ஆம் ஆண்டு பொருளாதாரப் பட்டம் பெற்றுள்ளார். இதனையடுத்து, எர்ன்ஸ்ட் மற்றும் யங் என்ற இடத்தில் ஆலோசகராக பணிபுரிந்துள்ளார். இந்த நிலையில், தேசிய அளவில் முதலிடம் பிடித்த இஷிதா கிஷோர் கூறுகையில், “என்னுடைய நாட்டுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பு கிடைத்ததில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
அந்தப் பணியை சிறப்பாக செய்வேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. என்னுடைய விடாமுயற்சிக்கு கிடைத்த சரியான வெற்றியாக இதை நான் கருகிறேன். யுபிஎஸ்சியின் முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய 3 தேர்வுக்கும் வெவ்வேறு விதங்களில் தயாராக வேண்டி இருக்கும்.