மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா சட்ட மேலவையில் காலியாக இருந்த 10 இடங்களுக்கான தேர்தல் கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் 5 வேட்பாளர்களும், ஆளும் சிவசேனா கூட்டணி சார்பில் 6 வேட்பாளர்களும் போட்டியிட்டனர். இதில் பாஜகவின் ஐந்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. பாஜகவின் வெற்றி ஆளும் சிவசேனாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதற்கு காரணம், மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 106 எம்எல்ஏக்களை மட்டுமே கொண்டுள்ள பாஜகவுக்கு ஆதரவாக 133 வாக்குகள் பதிவாகின. அதன்படி, சுமார் 28 எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்ததாக தெரிகிறது. சிவசேனாவின் 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக பரபரப்பு தகவல் வெளியானது.
இதைத்தொடர்ந்து அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உட்பட சிவசேனாவில் 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் நேற்று மாயமாகினர். அவர்கள் குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அவர்களை தொடர்பு கொள்ள சிவசேனா கட்சியினர் முயற்சித்தும் முடியவில்லை. இதையடுத்து எம்எல்ஏக்கள் அனைவரும் நேற்று(ஜூன் 21) இரவு விமானம் மூலம் அசாம் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.