நிச்சயதார்த்த நாளில் Ex-காதலனால் கடத்தப்பட்ட பெண்; சினிமாவை மிஞ்சும் நிஜம் ஹைதராபாத்:ரெங்காரெட்டி மாவட்டத்தில் துர்கயாஞ்சல் மன்னேகுடாவில் வசித்து வருபவர், தாமோதர் ரெட்டி. இவரது மகள் பிடிஎஸ் படித்து வருகிறார். அவருக்கு 24 வயதாகிறது. இந்நிலையில் இப்பெண்ணுக்கு சில நாட்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிச்சயதார்த்த நாளன்று பெண்ணின் முன்னாள் காதலன் நவீன் என்பவர் அடியாட்களுடன் வீடு புகுந்து அப்பெண்ணை கடத்திச்சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் நவீனை உடனே கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல் துறையின் துரித செயல்பாட்டால் அப்பெண் அடுத்த 6 மணி நேரத்தில் மீட்கப்பட்டார்.
இதற்கிடையில் நவீனை கைது செய்ய காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் அவர் ஹஸ்தினாபுரத்தில் டீக்கடை நடத்தி வருவதாகவும், பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது எனவும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், 'இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்து ஒன்றாக கோவா, விசாகப்பட்டினம் என பல இடங்களுக்கு சுற்றுலா சென்றோம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள பாபட்லா மாவட்டம் மார்தூர் மண்டல், வலபர்லா கிராமத்தில் உள்ள ஒரு கோயிலில் இந்து முறைப்படி நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். இருப்பினும் பெண்ணின் தந்தை மகளின் படிப்பு முடியும் வரை கல்யாணம் குறித்து பேச வேண்டாம்’ எனக் கூறியதாக தெரிவித்தார்.
பெண் வீட்டாரின் குற்றச்சாட்டு:முன்னதாக இரு குடும்பத்தாருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால் பிரிந்து விட்டதாகவும், அதற்கு அப்பெண்ணும் சம்மதம் தெரிவித்ததாகவும் பெண் வீட்டார் கூறினர். நவீன் அப்பெண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் விடுத்து வந்த நிலையில் காவல்நிலையத்தில் அவர் மீது புகார் அளித்துள்ளனர். சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த நவீன் பல நாட்களாக திட்டமிட்டு பெண்ணைக் கடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பெண்ணைக் கடத்தியது எப்படி: தான் காதலித்த இளம்பெண் வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொள்வதை தாங்க முடியாத நவீன் நேற்று (டிச.9) மதியம் ஒரு மணியளவில் மன்னேகுடாவில் உள்ள அவரது வீட்டிற்கு மணமகன் மற்றும் உறவினர்கள் வருவதற்கு முன்பாகவே, 5 கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் 100 பேருடன் சென்று பெண்ணின் வீட்டாரை தாக்கி கடத்தியுள்ளார். அங்குள்ள சிசிடிவி கேமராக்களை உடைத்து நொறுக்கியுள்ளார். வீடுபுகுந்து பெண் கடத்தப்பட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இதையும் படிங்க:120 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த திருமண ஜோடி - செல்ஃபி எடுக்க முயன்றதால் விபரீதம்