ஷாம்லி (உத்தரப்பிரதேசம்): முகலாய ஆட்சியின் போது 1760 மற்றும் 1806-க்கு இடையில் ஒரு வளமான சமஸ்தானம் உத்தரப்பிரதேச மாநிலம் கவுஸ்கர் பகுதியில் இருந்தது. தற்போது, 300 ஆண்டுகளுக்கும் மேலாக பாழடைந்த மசூதி உட்பட, புகழ்பெற்ற சில தடயங்களும் இங்கு காணப்படுகின்றன.
இந்த கிராமத்தில் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த மக்கள் இல்லாத காரணத்தால், கடந்த 1940 ஆம் ஆண்டு முதல் இந்த மசூதியில் அஸான், நமாஸ், துவா கூட செய்யப்படவில்லை. தற்போது இந்த பழமையான கட்டடத்தை புதுப்பிக்க கிராம இந்துக்கள் முன் வந்துள்ளனர். தற்போது இந்த கவுஸ்கர் கிராமத்தில் அமைந்துள்ள மசூதியை பாதுகாக்கும் பணியை சமூக செயற்பாட்டாளர் சவுத்ரி நீரஜ் ரோடு தலைமையில் கிராம மக்கள் மேற்கொண்டுள்ளனர்.
300 ஆண்டுகள் பழைமையான மசூதியை பாதுகாக்கும் முயற்சியில் உ.பி. கிராம இந்து மத மக்கள்! இதுகுறித்து சவுத்ரி நீரஜ் கூறுகையில், “இந்த மசூதி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் 13 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களும் ஒருமனதாக உள்ளனர். ஏனென்றால், கடந்த காலங்களில் இந்தப் பகுதியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரே பாரம்பரியச் சின்னமாக இந்தப் பள்ளிவாசல் உள்ளது.
பல்வேறு கிராமங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் இந்த மசூதியைப் பார்க்க வருவார்கள். மதச்சார்பற்ற சுற்றுலா தலமாக மாற்றுவதற்கான நிதி அம்சங்களிலும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். மசூதியின் வளாகம் 3.5 பிகாக்களில் பரவியுள்ளது.
ஆனால், அதன் பெரும்பாலான காலி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அதனை அகற்ற அனைத்து மக்களும் ஒப்புக்கொண்டனர். கவுஸ்கர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சஞ்சய் சவுத்ரி என்பவரின் வயலும் உள்ளது. மசூதியின் எந்த நிலமும் விவசாயிகளின் வயலுக்கு வந்தால், அனைத்து விவசாயிகளும் பேச்சுவார்த்தைக்குப் பிறகு விட்டுவிடத் தயாராக இருக்கின்றனர். மசூதியின் பாதுகாப்புப் பணிகளைத் தொடங்க அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு வருகிறோம்.
அதன்பின், வளாகத்தை சுத்தம் செய்யும் போது, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, எல்லை சுவர் அமைக்கப்படும். இதற்காக கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது ” எனத் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், “இந்த வரலாற்றுப் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். இந்த மசூதி நாட்டின் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமையும்” எனக் கூறினார்.
தொடர்ந்து கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ஷிவ்லால் கூறுகையில், “இந்த இடத்தில் தூசி, மண் ஆகியவை படிந்துள்ளது. எனவே, 50 - 60 கிராமவாசிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அந்த இடத்திலேயே தூய்மைப் பணியை மேற்கொண்டோம். இந்த இடத்தில் உள்ள மசூதியைப் பார்க்க ஏராளமான இஸ்லாமியர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், இந்த பாரம்பரியத்தின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. இந்த பணிக்கு அரசு உதவி செய்யும் என எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து கிராமவாசி அபிஷேக்குமார் கூறுகையில், “பல ஆண்டுகளுக்கு முன், வெளியூர் ஆட்கள் இங்கு வந்து, இரவு நேரங்களில் புதையல் தோண்டுவது வழக்கம். இதனால் உண்டாகும் ஆழமான குழிகளை கிராமத்து மக்கள் காலையில் பார்த்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட அகழாய்வின் காரணமாக இந்த மசூதியின் வரலாறு தெரிய வந்தது” எனக் கூறினார்.
இதையும் படிங்க:மத மோதல் குறித்து அச்சமின்றி பேசிய சாய் பல்லவி... சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பிய விவாதம்