லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்சாஹர் மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்ப்பட்ட நான்கு சிறை கைதிகள் சிகிச்சைப் பெற்றுவந்தனர். சிகிச்சையின்போது திடீரென தப்பியோடிய நான்கு பேரில் மூன்று பேரை கைது செய்த காவல்துறையினர், தப்பியோடிய மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர்.
இதுதொடர்பாக புலந்த்சாஹர் மூத்த காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார் கூறியதாவது, சிறையில் அடைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகளுக்கு, டிசம்பர் 19 கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து நான்கு பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனை வளாகத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டபோதிலும், மருத்துவமனையின் பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு சிறை கைதிகள் தப்பிச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய சிறை கைதிகளை தனிப்படை அமைத்து தேடும் பணியைத் தீவிரப்படுத்தினர்.
தீவிரத் தேடுதல் பணியின்போது, மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய நான்கு சிறை கைதிகளில் மூன்று பேரை பிடித்தனர். தலைமறைவாகவுள்ள மேலும் ஒரு சிறை கைதியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.