கான்பூர் நகரில் உள்ள கோத்வாளி காவல் நிலையத்தின் ஆய்வாளராக நரேந்திர சிங் யாதவ் (50) என்பவர் பணியாற்றி வந்தார். இவர், தனது பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி, உ.பி., முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை தொடர்ந்து விமர்சித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நரேந்திர சிங் அநாகரிகமாக நடந்துகொண்டதாக கூறி, ஒழுங்கு நடவடிக்கையாக அவருக்கு விஆர்எஸ் கொடுத்து, முதலமைச்சர் தலைமையிலான பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், நரேந்திர சிங் யாதவ் மீது பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகளையும் காவல் துறை சுமத்தியுள்ளது.
இதுதொடர்பாக சக போலீஸ் அதிகாரிகள், பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்து தொடர்ந்து அவதூறான கருத்துகளை தெரிவித்து வந்ததாக கூறுகின்றனர். இதுகுறித்து, கூடுதல் காவல் ஆணையர் ஆனந்த் குல்கர்னி கூறுகையில், "முறைகேட்டில் ஈடுபட்டது, அதிகாரிகளிடம் தவறாக நடந்து கொண்டது, பணியில் இருக்கும் போது மது அருந்துதல், அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளில் பங்கேற்பது, முன்னறிவிப்பின்றி பணிக்கு வராதது போன்ற பல்வேறு புகார்கள் யாதவ் மீது உள்ளது.
விசாரணை குழு பரிந்துரையின்படி அவருக்கு விஆர்எஸ் கொடுக்கப்பட்டுள்ளது. சமர்பிக்கப்பட்ட சாட்சிகளின் அடிப்படையில், அவர் காவலராக தொடர தகுதியற்றவர் என்பதை உறுதிசெய்தது" என்றார்.
இதையும் படிங்க:13 வயதில் 56 நிறுவனங்களுக்கு சிஇஓ - வளர்ந்து வரும் மார்க் ஸக்கர்பர்க்...