மத்தியபிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு நடந்த பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜூபால் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த வழக்கறிஞர் உமேஷ் பால் கடந்த பிப்ரவரி மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உமேஷ் பால் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த, சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ அத்திக் அகமதுவின் மகன் ஆசாத் மற்றும் அவரது உதவியாளர் நேற்று (ஏப்.13) என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்ட்டரை நடத்திய காவல் துறைக்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பாராட்டுத் தெரிவித்திருந்தார். உத்தரப் பிரதேசத்தில் மாஃபியாக்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இரண்டு நாட்கள் பயணமாக மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூருக்கு சென்றுள்ள, உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், மோவில் அம்பேத்கர் ஜெயந்தியையொட்டி அம்பேத்கர் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார்.