புலந்தசகர்: உத்தரபிரதேச மாநிலத்தில் ஆழ்குழாய் கிணற்றில் இருக்கும் மோட்டாரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்வதற்காக மூன்று பேர் கிணற்றில் இறங்கிய நிலையில் மூவரும் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். புலந்தசகர் மாவட்டத்தில் உள்ள ஜதாவுல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஹன்ஸ்ராஜ், அனில் மற்றும் கைலாஷ்.
மூவரும் விவசாய தொழில் செய்து வரும் நிலையில், அவர்களது ஆழ்குழாய் கிணற்றில் இருக்கும் மோட்டாரில் ஏற்பட்ட பழுதை சரி செய்வதற்கான பணியில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது, அதில் ஒருவர் மட்டும் கிணற்றுக்குள் இறங்கியதாக தெரிகிறது. அப்போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவர் மற்ற இருவர்களை அழைத்துள்ளார். உடனடியாக அவர்களும் கிணற்றில் இறங்கி மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களையும் விஷ வாயு தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில், மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.