ராம்பூர்: சமாஜ்வாதி கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆசம் கான் உயிருக்கு சிறையில் ஆபத்து இருப்பதாக அவரது மகன் அப்துலலா ஆசம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஆசம் கான் அவரது மகன் அப்துல்லா ஆசம் ஆகியோர் மீது 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில உள்ளன. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட இருவரும் சீதாப்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அப்துல்லா ஆசம்க்கு பிணை கிடைத்த நிலையில் அவர் இன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
பாஜக ஒரு மூழ்கும் கப்பல், என் தந்தை உயிருக்கு ஆபத்து- ஆசம் கான் மகன் பரபரப்பு பேட்டி! தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அப்துல்லா ஆசம், “உத்தரப் பிரதேசத்தில் என்ன நடக்கிறது என்பதை உலகமே அறியும். கோரக்பூரில் தொழிலதிபர் கொல்லப்பட்டுள்ளார், உன்னாவ் மகள் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். யோகி ஆதித்யநாத் ஆட்சியில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. மத்திய- மாநில பாஜக அரசுகளுக்கு என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைதியாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் அப்பாவி தந்தை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், சிறைக்குள் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. பாஜக ஒரு மூழ்கும் கப்பல், அந்தக் கப்பலில் இருந்து ஒவ்வொருவரும் வெளியேறிவருகின்றனர்” என்றார்.
அப்துல்லா ஆசம், சமாஜ்வாதி கட்சி சார்பில் ராம்பூர் தொகுதியில் களம் காண்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கும், சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில், உன்னாவ் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு சமாஜ்வாதி ஆதரவு அளித்துள்ளது.
உன்னாவ் தொகுதியில், உன்னாவ் எம்எல்ஏ., வால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பெண்ணின் தாயார் போட்டியிடுகிறார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : 23 மாதங்களுக்கு பிறகு ஆசம் கான் மகன் விடுதலை!