வாரணாசி:உத்திரபிரதேச மாநிலம் பேலுபூர் பகுதியில் கடந்த மே 31ஆம் தேதி சாலையோரம் நின்ற காரில் இருந்து காவலர்கள் ரூ. 92.94 லட்சம் பணத்தை மீட்டனர். இந்நிலையில் பணம் யாருடையது எனவும், பணம் பறிபோனதாக யாரேனும் புகார் கொடுத்துள்ளார்களா என்ற அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் முன்னதாக குஜராத் மாநிலம் அவுரியா மாவட்டம் பண்டாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் ஊழியரை சிலர் கடத்தி சென்று அவரிடம் இருந்து கத்தி முனையில் பணம் பறித்துச்சென்றதாக கூறப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் ஏற்கனவே நான்குபேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு குறித்து தற்போது திடுக்கிடும் பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து சிறப்பு காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பேலுபூர் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அதன் அடிப்படையில் விசாரித்தபோது, தொழிலதிபரின் ஊழியரை கடத்தி சென்று பணத்தை கொள்ளையடித்துவிட்டு காவலர்கள் உட்பட சிலர் பணத்தை பங்குபோட்டுக்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதில் மற்றோரு காவலருக்கு பங்கு பிரிப்பதில் குறைவான தொகை வழங்கப்பட்டதால் அவர் ஆத்திரம் அடைந்துள்ளார். இதனால் இந்த சம்பவம் குறித்து அவர் வெளியில் தகவலை கசிய செய்துள்ளார்.