அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைநகர் டெல்லிக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று (ஜூன்.10) ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த அவர், இன்று (ஜூன்.11) பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
உ.பி. பாஜகவில் புகைச்சல்
கடந்த சில மாதங்களாகவே உத்தரப் பிரதேச பாஜகவில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. உத்தரப் பிரதேச அரசு, கோவிட்-19 தொற்றை கையாண்ட விதம் பெரும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. உயிரிழந்த உடல்கள் நதிகளில் மிதக்கும் புகைப்படங்கள் சர்வதேச ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு மாநில அரசுக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியது.
மேலும், அன்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவை பின்னுக்குத் தள்ளி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி முதலிடத்தை பெற்றது. இதுபோன்ற தொடர் பின்னடவை சந்தித்துள்ள உத்தரப் பிரதேச பாஜக மீது கட்சி மேலிடம் பெரும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.