லக்னோ (உத்தரப்பிரதேசம்):உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து 55 பேர் கொண்ட குழுவினர் தென்னிந்தியாவில் உள்ள முக்கிய கோயில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி பாரத் கெளரவ் பயணிகள் ரயில் மூலமாக தமிழ்நாட்டிற்கு வந்து உள்ளனர்.
இவர்கள் நேற்று (ஆகஸ்ட் 25) நாகர்கோவில் பத்மநாப சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, இன்று (ஆகஸ்ட் 26) அதிகாலை மதுரை வந்தடைந்தனர். இவ்வாறு இவர்கள் பயணம் செய்த ரயில் பெட்டி மதுரை சந்திப்பில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மதுரை - போடி ரயில் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அதிகாலை 5.15 மணியளவில் ரயில் பெட்டியில் இருந்த சிலர் சமையல் செய்வதற்காக சிலிண்டரை பயன்படுத்தியபோது தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீ மளமளவெனப் பரவி பெட்டி முழுவதும் எரியத் தொடங்கியது. பின்னர் இந்த சம்பவம் குறித்து அறிந்து மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் துறையினர், ரயில்வே காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த 9 பேரில் 6 நபர்களை மட்டுமே அடையாளம் காண முடிந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி பரமேஸ்வர் டயத் குப்தா, தாமன்சிங் சந்துரு, ஹேமன் பன்வால், நிதிஷ் குமோரி, சாந்தி தேவி, மனோ வர்மா அகர் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மீதம் உள்ள 3 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து உள்ளன. மேலும், காயமடைந்தவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
அதேபோல், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தி உள்ளார். இந்த நிலையில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதன்படி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது ‘X' வலைதளப் பதிவில், “தமிழ்நாட்டின் மதுரையில் நிகழ்ந்த எதிர்பாராத ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து வருத்தமாக உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். இந்த விபத்தில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த உயிரிழந்தவர்களிக்ன் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்க அறிவுறுத்தப்படுகிறது.
விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், ஏதேனும் பிரச்னைகளுக்கு 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்கப்பட்டு உள்ளது. உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையவும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் நான் கடவுளை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க:Madurai train fire: மதுரையில் சுற்றுலா ரயிலில் நிகழ்ந்த தீ விபத்தில் 9 பேர் பலி: விபத்துக்கான காரணம் என்ன?