பிரயாக்ராஜ்: பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ராஜூ பால், கடந்த 2005ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.பி. அடிக் அகமது, அவரது சகோதரர் முகமது அஷ்ரப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மருத்துவப் பரிசோதனைக்காக இருவரும் சனிக்கிழமை இரவு பிரயாக்ராஜ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
மருத்துவமனைக்கு வெளியே அடிக் அகமது செய்தியாளர்களைச் சந்தித்த போது, நிருபர்கள் போல் வந்த 3 பேர், அடிக் அகமது மற்றும் அவரது சகோதரர் முகமது அஷ்ரப் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர். இச்சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் லவ்லீஸ் திவாரி, மோஹீத், அருண் குமார் மயூரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மூவரும் கடந்த ஞாயிறன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். நைனி சிறையில் அடைக்கப்பட்ட 3 பேரும், பாதுகாப்புக் காரணங்களுக்காக பிரதாப்கார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், மூவரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, பிரயாக்ராஜ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் 3 பேரையும், 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது. வரும் 23ம் தேதி மாலை 5 மணிக்கு, 3 பேரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ.11.04 கோடி சொத்துக்கள் முடக்கம்!