மத்திய அரசு வழங்கிய ரூ.15,000 கோடி தொகையை காங்கிரஸ் அரசு என்ன செய்தது என தெரியவில்லை. முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் முறைகேடு நடந்துள்ளதாக, பாஜக தரப்பில் சனிக்கிழமை (மார்ச்.20) குற்றப்பத்திரிகையை வெளியிட்டு குற்றஞ்சாட்டினர்.
இதுதொடர்பாக புதுச்சேரியில் இன்று (மார்ச்.21) செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், “ பாஜக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் அரசு மீதும், என் மீதும் வைத்துள்ளது. புதுச்சேரியில் உள்ள பஞ்சாலைகளை மூடியது, அப்போதைய ஆளுநர் கிரண்பேடி, அதற்கு ஒப்புதல் அளித்தது மத்திய பாஜக அரசு.
அரசு பொதுத்துறை நிறுவனங்களை மூடியது, அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க மறுத்தது கிரண்பேடி. அதற்கு ஒப்புதல் வழங்கியது மத்திய அரசு. தற்போது காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றஞ்சாட்டுவது தேர்தல் ஆதாயத்திற்கானது. புதுச்சேரி அரசுக்கு ரூ. 15 ஆயிரம் கோடி வழங்கப்பட்டதாக அமித் ஷா கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்க வலியுறுத்தினேன். இதுவரை நிரூபிக்கவில்லை.
நான் எந்த விசாரணைக்கும் தயார் என்றும் சவால் விடுத்தேன், பாஜக வாய்மூடி உள்ளது. புதுச்சேரியில் கூட்டணி கட்சிகளையும் மிரட்டி ஆட்சிக்கு வரவேண்டும் என பாஜக முயற்சி செய்கிறது” என்றார்.
இதையும் படிங்க: மீன் சந்தையில் ஆதரவு திரட்டிய மன்சூர் அலிகான்