கேரளா(கோட்டயம்):சமீபத்தில் கேரள சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட பல்கலைக்கழகத் திருத்தச்சட்டம் ஆகிய சட்டவிரோதங்களை மாநில அரசு சட்டப்பூர்வமாக்குகிறது என்றும்; தான் இதை அனுமதிக்க முடியாது எனவும் இன்று(செப்.15) கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.
மேலும், அதே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட லோக் ஆயுக்தா திருத்தச்சட்ட மசோதாவினையும் தான் எதிர்ப்பதாகத் தெரிவித்த ஆளுநர், “யாரும் அவர் அவரின் தேவைக்கு நீதிபதியாகிவிட முடியாது..!” எனவும் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்புகளுக்கும் புறக்கணிப்புகளுக்கும் மத்தியில் கடந்த ஆக.30 மற்றும் செப்.1 ஆகிய தேதிகளில் நடந்த கேரள சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா திருத்தச்சட்ட மசோதா மற்றும் பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் , “பல்கலைக்கழக திருத்தச்சட்ட மசோதா முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களின் தகுதியற்ற உறவினர்களைப் பல்கலைக்கழகப்பதவிகளில் நியமிக்கப்பார்ப்பதாய் உள்ளது. நான் ஏற்கெனவே எனது வேந்தர் பதவியை விட்டுவிட்டு விலகத் தயாராகவுள்ளேன் எனக் கூறினேன்.
ஆனால், நீங்கள் செய்வதற்கெல்லாம் கையொப்பமிட சொன்னால் என்னால் அது முடியாது. இந்த மசோதாவின் மூலம் இவர்கள் சட்டவிரோதங்களை சட்டப்பூர்வமாக்கப் பார்க்கிறார்கள். இதை என்னால் அனுமதிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.
மேலும், லோக் ஆயுக்தா திருத்தச்சட்ட மசோதா குறித்து பேசுகையில், “நீதித் துறையின் அடிப்படைக் கோட்பாடில் எந்த ஒரு தனி நபரையும் அவரவர் தேவைக்காக நீதிபதியாக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த மசோதா அதற்கு எதிராக உள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காஷ்மீரில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழப்பு