டெல்லி:காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக 1995ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஐநா சபை காலநிலை மாநாட்டினை (climate change conference) நடத்தி வருகிறது. காலநிலை மாற்ற மாநாடு இன்று துபாயில் (COP 28) துவங்குகிறது. இந்த மாநாடு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது எரிசக்தி தேவைக்காக நிலக்கரியில் பங்கை குறைப்பதில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இந்தியாவின் எரிசக்தி தேவையில் எப்போதும் நிலக்கரி முக்கியத்துவம் வகித்து வருகிறது. நமது வளர்ச்சிக்கு தேவையானவற்றிற்றை பூர்த்தி செய்ய முயற்சித்து வருகிறோம்.
நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய காலநிலை மாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் நமது வளர்ச்சி பசுமையானதாக இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற COP26 இயற்றப்பட்ட ஐந்து ‘பஞ்சமிர்த’ கொள்கைக்கு பிரதமர் மோடி உறுதியளித்திருந்தார்.
புதைபடிவமற்ற மின்சார உற்பத்தி திறனில் 500 GW அளவை எட்டுவது, மின்சார தேவையில் பாதியை புதுப்பிக்கத் தக்க சக்திகளில் இருந்து பெறுவது, 2030ஆம் ஆண்டுக்குள் 1 பில்லியன் டன் கார்பன் உமிழ்வைக் குறைப்பது உள்ளிட்ட ஐந்து கொள்கைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருந்தார்” எனத் தெரிவித்தார்.
உலகில் பல்வேறு நாடுகளிலும் புதைப்படிம எரிபொருட்களை எரிப்பதன் மூலம் தான் தங்களுக்கு தேவையான சக்தி பெறப்படுகிறது. இவ்வாறு புதைப்படிம எரிபொருட்களை எரிப்பதன் மூலம் அதிகளவு கார்பன் உமிழ்வு நிகழ்கிறது. காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் புதைப்படிம எரிபொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என கருதப்படுகிறது. முந்தைய மாநாடுகளிம் இதுபோன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருந்தன.
முன்னதாக புதைப்படி எரிபொருள் வளத்தை நம்பி இருக்கும் நாடான துபாயில் நடத்தப்படும் இந்த மாநாட்டிற்கு ஒரு தரப்பினர் தங்கள் எதிர்ப்புகளையும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. துபாய் தனது எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க முயற்சி மேற்கொள்வது இந்த எதிர்ப்பிற்கு காரணமாக கூறப்படுகிறது.
இந்த மாநாட்டில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தேவையான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அதில், அதிகளவு கார்பன் உமிழ்வை வெளியிடும் வளர்ந்த நாடுகள், பொருளாதார நிலையில் பின்தங்கிய நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் தேவையான நிதியுதவியை வழங்கும்.
முன்னதாக இந்த மாநாடு குறித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “பாரிசில் உறுதிமொழி அளித்த தீர்மானக்களுக்கு நிதி அளிக்கப்பட்டது. ஆனால் எப்போதும் நிதிக்காக காத்திருக்க முடியாது. இந்தியா தனது சொந்த நிதியில் இருந்து சாதித்துக் காட்டுவதை நோக்கி முன்னேற்றும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: சனாதன தர்மம் விவகாரம்; உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான அவமதிப்பு மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!