கரோனா இரண்டாவது அலையால் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆக்சிஜன் கிடைக்காமல் இந்திய மருத்துவமனைகள் திணறிக் கொண்டிருக்கின்றன. பல மாநிலங்களில் சுகாதாரக் கட்டமைப்பு முடங்கிப்போகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மாநில அரசுகள் மத்திய அரசிடம் உதவி கோரிவருகின்றன. இப்படியொரு கடினமான தருணத்தில் சில நாடுகள் இந்தியாவுக்கு ஆக்சிஜனையும், பிற மருத்துவ உபகரணங்களையும் அனுப்பியிருக்கின்றன.
கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்தின் கீழ் இந்தியா தத்தளிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3.60 லட்சமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் 3,293 தொடர்புடைய இறப்புகள் நாட்டில் பதிவாகியுள்ளன.
இந்தியாவை ஆதரிப்பதற்கான தனது நடவடிக்கையை இங்கிலாந்து சமீபத்தில் அறிவித்தது. அதையடுத்து 495 ஆக்சிஜன் செறிவூட்டிகளும், 200 வென்டிலேட்டர்களும் அனுப்பப்பட்டன. இங்கிலாந்திலிருந்து இந்த மருத்துவப் பொருள்களின் முதல் தொகுதி செவ்வாய்க்கிழமை (ஏப். 27) டெல்லிக்கு வந்துள்ளது. மீதமுள்ளவை வெள்ளிக்கிழமைக்குள் டெல்லிக்கு வரவுள்ளன.