டெல்லி: 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள், அதைப் புதுப்பிக்காதவர்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு இணைய தளம் மூலம் இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஆதார் அடையாள அட்டை இன்றியமையாத ஒன்றாக உள்ளது.
அரசுத் துறைகளின் பல்வேறு திட்டங்களைப் பெறுவது, வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவச் சலுகைகள், வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் ஆதார் அட்டை முக்கியத்தக்க ஒன்றாக உள்ளது. அண்மைக் காலமாக ஆதார் அட்டைகளைக் கொண்டு மோசடிகள் நடப்பதாகப் புகார்கள் எழுகின்றன.
அதார் அட்டை வழங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆனதால் அதில் செல்போன் நம்பர், முகவரி உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இல்லாததே இது போன்ற மோசடிகளுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசும், இந்தியத் தனித்துவ அடையாள ஆணையமான UIADI-யும் (Unique Identification Authority of India) முக்கிய முயற்சியைக் கையில் எடுத்து உள்ளன.
10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதார் அட்டை பெற்று இதுவரையில் புதுப்பிக்காதவர்கள் இணையதளம் மூலம் இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையமான UIADI தன் ட்விட்டர் பக்கத்தில், "ஆதார் எண்ணை வலுப்படுத்தச் சரியான விவரங்களை வழங்கவும். 10 ஆண்டுகளுக்கும் முன்னதாக பெற்ற ஆதார், மற்றும் இதுவரை புதுப்பிக்கபடாத ஆதார் எண்ணை அடையாளச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று ஆகியவற்றுடன் இணைத்து https://myaadhaar.uidai.gov.in என்ற இணையதள முகவரி மூலம் மார்ச் 15 முதல், ஜூன் 14ஆம் தேதி வரை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம்" என அந்த ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இலவசமாகப் புதுப்பிக்கும் சேவையை "my Aadhaar" எனும் இணையதளத்தில் மட்டுமே பெற முடியும் என்றும், ஆதார் மையங்களில் நேரடியாக சென்று புதுப்பித்தால் வழக்கம் போல் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் லட்சக்கணக்கான மக்கள் பயனடையும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதையும் படிங்க:நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் - சுனாமி எச்சரிக்கை?