டெல்லி: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18ஆம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத அதிகனமழை காரணமாகக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாகத் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் குடியிருப்புகள், சாலைகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் என பல்வேறு உள் கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று(டிச.21) தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பிறகு மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினார்.
பின்னர் திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழை குறித்த முன்னெச்சரிக்கை சரியாகக் கொடுக்கப்படவில்லை என்று வானிலை ஆய்வு மையத்தைக் குற்றம்சாட்டியதோடு மீட்பு விவகாரத்தில் மத்திய அரசைக் கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக வெள்ள பாதிப்பிற்கு மத்திய அரசு நிதியை ஒதுக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்
இந்நிலையில், டெல்லியில் இன்று(டிச.22) செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதலமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளித்ததோடு, மழை முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணியில் மத்திய அரசின் செயல்பாடு என்ன என்பது குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய அவர், "அதிநவீன வசதிகளைக் கொண்ட சென்னை வானிலை ஆய்வு மையத்திலிருந்து கடந்த 12ஆம் தேதி முதலே தென் மாவட்டங்களில் அதேகனமழை பெய்யும் எனவும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் மாநில அரசு அதனை முறையாகக் கண்டுகொள்ளவில்லை அதனால் தான் இவ்வளவு பெரிய பாதிப்புகளை மக்கள் சந்தித்துள்ளனர் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் தென் மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புக் குழு, கடலோர காவல்படை, ராணுவம், விமானப்படை ஹெலிகாப்டர்கள் என மத்திய அரசு சார்பில் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டதன் விளைவாகவே டிசம்பர் 18ஆம் தேதியிலிருந்து தற்போது வரை 42 ஆயிரத்து 290 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மழை பாதிப்பால் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கிய 800க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலமாக உணவு வழங்கப்பட்டு பேரிடர் மீட்பு குழு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்று கூறிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடலோர காவல்படை, ஹெலிகாப்டர் மூலம் மட்டும் இதுவரை ஐந்தாயிரத்து 49 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
மத்திய அரசு வழங்கிய நிதி எவ்வளவு?: மாநில பேரிடர் மீட்பு கால நிதியாகத் தமிழக அரசுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கவேண்டிய 900 கோடி தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பே வழங்கப்பட்டுவிட்டதாகக் கூறிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஏப்ரல் மாதத்தில் முதல் தவணையாக 450 கோடியும், இரண்டாவது தவணையாக 450 கோடி கடந்த 12ஆம் தேதியும் விடுவிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என கூறுவது அபத்தமானது என்று பதிலளித்தார்.
டெல்லியில் முதலமைச்சர் என்ன செய்தார்?:வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளில் மத்திய குழுவினர் ஈடுபட்டுள்ள நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் மீது அக்கறை இல்லாமல் இந்தியா கூட்டணியில் பங்கேற்க டெல்லியில் முகாமிட்டிருந்தார் என நிதியமைச்சர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க:நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி - நான்கு பேரின் காவல் நீட்டிப்பு! நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?