டெல்லி: 2023-24 நிதி ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதராமன் நேற்று (பிப்.1) தாக்கல் செய்தார். அடுத்தாண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தனி நபர் வருமான வரி உச்சவரம்பு அதிகரிப்பு உள்ளிட்ட நடுத்தர வர்க்க மக்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகின.
வெளிநாடுகளான நட்புறவை மேம்படுத்தும் வகையில் மத்திய பட்ஜெட்டில் அயலக மேம்பாட்டு உதவியாக 5 ஆயிரத்து 848 கோடியே 58 லட்ச ரூபாய் ஒதுக்கி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த நிதியில் இருந்து லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, பூடான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் வளர்ச்சிகளுக்கு உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக பூடானுக்கு 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த நிதி பட்ஜெட்டில் பூடானுக்கு 2 அயிரத்து 266 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், நடப்பு 2023-24 பட்ஜெட்டில் கூடுதலாக 134 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. பிராந்திய இணைப்பு முயற்சியின் ஒரு படியாக ஈரானின் உள்ள சாபஹார் துறைமுக உள்கட்டமைப்பு பணிகளுக்கு 100 கோடி ரூபாய் மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளன.