மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள், புதுச்சேரி வழக்கறிஞர்கள் அலுவலக அறைகள் அடங்கிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (ஜன 19) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், முழுமையான உயர்நீதிமன்றம் போல் புதுச்சேரி நீதிமன்ற வளாகம் காட்சி அளிக்கிறது. தமிழகம் - புதுச்சேரியின் அனைத்து நீதிமன்ற வளர்ச்சிக்கும் உதவி செய்வோம். சில மாதங்களில் தமிழ்நாட்டின் மாவட்ட நீதிமன்றங்களுக்கு செல்வேன்.
கரோனா ஊரடங்கில் அதிக வழக்கு எடுத்து நடத்தியது இந்தியா தான். காரணம் தொலைதொடர்பு வசதி. இதனால் அனைத்து நீதிமன்றங்களும் 5 ஜி சேவை பெறும். நீதிமன்றத்தில் அதிக நேரம் மக்கள் செலவிடக்கூடாது. நீதி விரைந்து தரப்படுதல் அவசியம். நீதிமன்றம் நவீனப்படுத்தப்படவேண்டும்.
கடந்த 2014ஆம் ஆண்டில் சான்றிதழ்களில் உயர் அதிகாரிகள் கையெழுத்து தேவையில்லை என்ற முறையை பிரதமர் நடைமுறைப்படுத்தினார். இது ஜனநாயகம். நீதித்துறை மக்களுக்கானது. நீதித்துறைக்கு அனைத்து வித ஒத்துழைப்பையும் அரசு தரும். புதுச்சேரிக்கு உயர் நீதிமன்ற கிளை அல்லது பென்ஞ் நிச்சயம் அமைத்து தரப்படும் என்று உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசுகையில், “உச்ச நீதிமன்ற நீதிபதி தொடங்கி அனைத்து நீதிபதிகளுக்கும் தெரிவிப்பது தன்னிச்சையாக நீதித்துறை செயல்படும் என்ற உறுதியைதான். நீதிபதிகள் நியமனம் பற்றிய கொலிஜியம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளேன். உச்ச நீதிமன்றம் உத்தரவை பின்பற்றியே தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினோம்.
அதுதொடர்பாக பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தற்போது நிலையே தொடரும். நியமனத்தில் சில விசயங்களை மேம்படுத்த விரும்புகிறோம். பலரும் தேவையில்லாமல் எல்லாவிஷயங்களையும் பிரச்னையாக்குகின்றனர். நீதி கிடைப்பது உறுதி செய்வதே எங்கள் எண்ணம். மக்களுக்கு விரைந்து கிடைக்கவேண்டும் என்பதே எண்ணம். நீதித்துறைக்கும், அரசுக்கு பிரச்னை என்று கூறுவது தவறானது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாமக்கல்லில் 165 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் - அமைச்சர் கீதா ஜீவன்