டெல்லி: மத்திய சட்டத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கிரண் ரிஜிஜூவின் பதவி பறிக்கப்பட்டு,அவருக்கு வேறு துறையான புவி அறிவியல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இவரது சட்டத்துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாசாரத்துறை இணை அமைச்சரான அர்ஜூன் ராம் மேக்வாலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் புவி அறிவியல் துறையின் அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். அதேபோல்,மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், சட்டத்துறையினை கூடுதலாகப் பார்ப்பார் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கிரண் ரிஜிஜூ மத்திய அமைச்சகத்தையும், உச்ச நீதிமன்றத்தையும், உச்சநீதிமன்ற கொலீஜியத்தையும் பொதுவெளியில் விமர்சித்தநிலையில், இந்த முடிவு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக, குடியரசுத்தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ''குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின்படி, மத்திய அமைச்சர்கள் குழுவில் உள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்களை மறு ஒதுக்கீடு செய்துள்ளார். மத்திய அமைச்சர்கள் குழுவில் உள்ள அமைச்சர்களிடையே இலாகாக்களை மறுஒதுக்கீடு செய்வதில் இந்தியக் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சியடைகிறார். அதன்படி, புவி அறிவியல் துறை கிரண் ரிஜிஜுவுக்கு ஒதுக்கப்படும். அர்ஜுன் ராம் மேக்வால், (இணை அமைச்சர்), ஸ்ரீ கிரண் ரிஜிஜுவுக்குப் பதிலாக, தற்போதுள்ள இலாகாக்களுக்குப் பதிலாக, சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் இணை அமைச்சராக சுதந்திரமான பொறுப்புடன் செயல்படுவார்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற துறைமாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது. அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த அமைச்சர் ரிஜிஜூ நீதித்துறை தொடர்பாக பொதுவெளியில்பேசி சர்ச்சையில் சிக்கியதைத் தொடர்ந்து, சட்டத்துறை அமைச்சர் ரிஜிஜூவை நீக்கும் முடிவை பிரதமர் மோடி எடுத்ததாக பாஜக வட்டாரங்கள் ஈடிவி பாரத் ஊடகத்திடம் தெரிவித்தன.
முன்னதாக, ரிஜிஜு சமீபத்தில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். அதில், '' சில ஓய்வுபெற்ற நீதிபதிகள் பொது களத்தில் தங்களின் தனிப்பட்ட விவகாரங்களுக்காக, இந்திய எதிர்ப்பு கும்பலின் ஒரு பகுதியாக உள்ளனர். நீதிபதிகள் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் பற்றிய புகார்களை நீதித் துறை பெறுகிறது. ஆனால் அது பதவியில் இருக்கும் நீதிபதிகளுக்கு ஆதரவாக மட்டுமே செயல்படுகிறது'' என்று அவர் கூறினார்.