டெல்லி: ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே 3 ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில், 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் எம்பி சக்திசின்ஹ் கோஹில் மற்றும் காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் பவன் கேரா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், "பெரும் கவனக்குறைவு, திறமை இன்மையால் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு தான் இந்த ரயில் விபத்து. இந்த சம்பவத்தில் தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அப்படியென்றால் அதை மத்திய ரயில்வே அமைச்சரிடம் இருந்து அவர் தொடங்க வேண்டும்.
ரயில் விபத்துக்கு முழு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக கோருகிறோம். இந்த கோர விபத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியும் பொறுப்பேற்பது அவசியம். அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை பிரதமர் மோடி எப்போது வலியுறுத்தப் போகிறார்? மத்திய அமைச்சர் அஸ்வினியின் அதீத விளம்பரம், ரயில்வே துறையில் இருக்கும் பாதுகாப்பு குறைபாடுகளை மறைத்துவிட்டன.
பச்சைக் கொடி காட்டி 'வந்தே பாரத்' ரயிலை இயக்குவதற்கான பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடி ஏற்கிறார். அதேபோல, ரயில்வே துறையில் உள்கட்டமைப்புகள் இல்லாததுக்கும் அவரே பொறுப்பு. சிஏஜி அறிக்கை, நாடாளுமன்ற நிலைக்குழு மற்றும் வல்லுநர்கள் பலமுறை எச்சரித்த பிறகும், ரயில்வே பாதுகாப்புக்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கூடுதல் தொகையை ஒதுக்காதது ஏன்? இந்த மாபெரும் ரயில் விபத்துக்கு யார் பொறுப்பு? ரயில் விபத்தை தடுக்கும் கவாச் தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் மோடி அரசு அமல்படுத்தப் போவது எப்போது? இந்திய ரயில்வே துறையில் 3 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதை மத்திய அரசு எப்போது நிரப்பும்?
இந்த விபத்தை அடிப்படையாக கொண்டு, நாங்கள் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கவில்லை. இதற்கு முன் நாட்டில் நடந்த ரயில்வே விபத்துக்களுக்கு பொறுப்பேற்று மாதவராவ் சிந்தியா, நிதிஷ் குமார், லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் தங்கள் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலகுவது அவசியம். ஆனால் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியும், ஒழுக்க நெறிகளும் எதிரெதிர் திசையில் பயணம் செய்கின்றன" என கூறினர்.
முன்னதாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில், "1956ம் ஆண்டு அரியலூரில் நடந்த ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று லால் பகதூர் சாஸ்திரி தனது ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 1999ல் நடந்த கய்சால் ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று, நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Odisha train accident: முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு... 2 மாதங்களில் அறிக்கை?