மும்பை: அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், மகாராஷ்டிரா மாநில விவசாயத்துறை அமைச்சருமான தனஞ்செய் முண்டே டெல்லி சென்று உள்ளார். அதேநேரம், ஜப்பானில் உள்ள மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
இதனையடுத்து, மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் மற்றும் அகமது நகர் ஆகிய பகுதிகளில் இருந்து மத்திய அரசு வெங்காயம் கொள்முதல் செய்ய உள்ளது. இதன் மூலம் வெங்காயமானது, குவிண்டால் வீதம் கொள்முதல் செய்யப்படும் என அம்மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தனது ‘X' வலைதளப் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
மேலும், இது தொடர்பான அவரது வலைதளப் பதிவில், “இன்று நமது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோரை தொலைபேசி மூலம் ஜப்பானில் இருந்து தொடர்பு கொண்டேன். அப்போது, மத்திய அரசு 2 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்ய முடிவெடுத்து உள்ளது.
அது மட்டுமல்லாமல், மகாராஷ்டிராவின் வெங்காய உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் முனைப்பில், மாநிலத்தின் நாசிக் மற்றும் அகமது நகர் ஆகிய பகுதிகளில் சிறப்பு கொள்முதல் மையங்கள் அமைக்கவும் அறிவிக்கப்பட உள்ளது. இதன் மூலம் வெங்காயம் குவிண்டாலுக்கு 2 ஆயிரத்து 410 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும். இது மாநிலத்தில் உள்ள வெங்காய உற்பத்தியாளர்களுக்கு பெரிய நிவாரணமாக இருக்கும்” என தெரிவித்து உள்ளார்.