வாஷிங்டன் :இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீது அதிக வன்முறை நடத்தப்படுவதாக கருதப்படுவது மேற்கத்திய நாடுகளின் எதிர்மறை கண்ணோட்டம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற பீட்டர்சன் சர்வதேச பொருளாதார நிறுவனத்தின் கருத்தரங்களில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் பின்னடைவு குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அப்போது 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பின் இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீது வன்முறை நிகழ்த்தப்படுவதாக கேட்கப்பட்ட கேள்விக்கு, அது மேற்கத்திய நாடுகளின் தவறான கண்ணோட்டம் என அவர் பதில் அளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், உலகளவில் அதிக இஸ்லாமியர்கள் மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரிய நாடு இந்தியா என்றார். இஸ்லாமியர்களின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டால் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை அதிகரிக்குமா என்று கேள்வி எழுப்பினார்.
இஸ்லாமியர்களின் வாழ்வாதாரம் கடினமாக மாற்றப்பட்டால் 1947 ஆம் ஆண்டு இருந்ததை விட இந்தியாவில் இஸ்லாமிய மக்கள் தொகை அதிகரித்து இருக்குமா என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அண்டை நாடான பாகிஸ்தானில் சிறுபான்மையின மக்கள் தொகை குறைந்து கொண்டு வருவதாக அவர் கூறினார்.