தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.89,047 கோடி நிதி ஒதுக்கீடு - மத்திய அரசு அதிரடி! - பிஎஸ்என்எல் 5ஜி சேவை

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 89,047 கோடி ரூபாய் மறுசீரமைப்பு நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 4ஜி/5ஜி அலைக்கற்றைக்கான ஒதுக்கீடும் இருப்பதால், இனி பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Union Cabinet
மத்திய அரசு

By

Published : Jun 7, 2023, 8:19 PM IST

டெல்லி:இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்கள் தொலைத்தொடர்புத் துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. ஆனால், பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் பல ஆண்டுகளாக 4ஜி சேவையை வழங்கவே திணறி வருகின்றன.

பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் கடந்த பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வந்தன. கடந்த 2019ஆம் ஆண்டு வாக்கில் எம்டிஎன்எல் நிறுவனத்திற்கு கடன் சுமை பெருகியதால், ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பதில் கூட சிக்கல் ஏற்பட்டது. அப்போது இரு தொலைத் தொடர்பு நிறுவனங்களும் மூடப்படும் என்றும் பேசப்பட்டது.

இரு நிறுவனங்களையும் இணைக்க மத்திய அரசும் ஆலோசித்து வந்தது. இந்நிலையில் 2019ஆம் ஆண்டு அக்டோபரில், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களை மறுசீரமைப்புச் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இரு நிறுவனங்களை இணைக்க கொள்கை ரீதியாக ஒப்புதலும் அளிக்கப்பட்டது. ஆனால், நிதிப் பிரச்சினை காரணமாக, அந்த திட்டத்தை மத்திய அரசு ஒத்தி வைத்தது.

அதன் பிறகு பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, கடந்த 2019ஆம் ஆண்டு மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கான மறுசீரமைப்பு நிதியை ஒதுக்கியது. 2019ஆம் ஆண்டில் 69,000 கோடி ரூபாயும், 2022ஆம் ஆண்டு 1.64 லட்சம் கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிதியுதவியால் இரு நிறுவனங்களும் புத்துயிர் பெற்றதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்த இரண்டு நிதித் தொகுப்புகளின் விளைவாக, பிஎஸ்என்எல் கடந்த 2021-22 நிதியாண்டு முதல் லாபம் ஈட்டத் தொடங்கியதாகவும், பிஎஸ்என்எல்-ன் மொத்தக் கடன் 32,944 கோடி ரூபாயிலிருந்து 22,289 கோடி ரூபாயாக குறைந்ததாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மூன்றாம் கட்டமாக பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 89,047 கோடி ரூபாய் மறுசீரமைப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (ஜூன் 7) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கான இந்த மறுசீரமைப்பு நிதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி/5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடும் இதில் அடங்கும்.

இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் 1.5 லட்சம் கோடியிலிருந்து 2.1 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியின் மூலம் நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கும் தகவல் தொடர்பு வசதி வழங்கும் வகையில் ஒரு நிலையான தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாக பிஎஸ்என்எல் விளங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: jharkhand train accident: நூலிழையில் தப்பிய ராஜ்தானி எக்ஸ்பிரஸ்.. ரயில் ஓட்டுநரின் சாதுர்யத்தால் விபத்து தவிர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details