டெல்லி:நாடாளுமன்றத்தில் 2022-23ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(பிப்.1) தாக்கல் செய்தார்.
வேளாண்துறை, கல்வித்துறை, வருமான வரி குறித்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மத்திய பட்ஜெட்டில் உள்ள 10 முக்கிய அம்சங்கள் குறித்து இங்கு காணலாம்.
1. வருமான வரி உச்ச வரம்பில் மாற்றமில்லை: மத்திய பட்ஜெட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி மற்றும் அதற்கான உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு எவ்வித மாற்றமும் இன்றி ரூ.2.50 லட்சமாகவே தொடரும்.
மத்திய அரசின் பயனுள்ள மூலதனச் செலவு 2022-23இல் ரூ.10.68 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1 விழுக்காடாக இருக்கும். அதே நேரத்தில், நிதிப் பற்றாக்குறை 6.4 விழுக்காடாக இருக்கும்.
2. டிஜிட்டல் கரன்சி: பிட்காயின் போன்ற கிரிப்ட்டோகரன்சி மூலம் ஈட்டப்படும் வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும். பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் புதிய டிஜிட்டல் கரன்சி ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும்.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளின்கீழ் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்.
3. போக்குவரத்து: 25,000 கி.மீ., தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும். 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் 400 புதிய ரயில்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் இயக்கப்படும்.
4. மன ஆரோக்கியம்: தொற்றுநோய் காலத்தில் மன ரீதியான பிரச்னைகளை எதிர்கொள்ள, ஆலோசனைகளைப் பெற மனநல மருத்துவத் திட்டம் (National tele-mental health program) தொடங்கப்படும்.
5. கதிசக்தி திட்டம்: பிரதமரின் கதிசக்தி திட்டத்தின்கீழ், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன் மூலம் பொருளாதாரத்தை முன்னேற்ற வழிவகுக்கப்படும்.