வீடு புகுந்து பெண் கடத்தல் - பதறிய பெற்றோருக்கு டிவிஸ்ட் கொடுத்த மகள் சிர்சில்லா(தெலங்கானா): தெலங்கானா மாநிலம், சிர்சில்லா மாவட்டத்தில், அதிகாலையில் வீடு புகுந்து தூங்கிக் கொண்டு இருந்த பெண்ணை, மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்ற சம்பவத்தில், திடீர் திருப்பமாக மாலையும் கழுத்துமாக அதே பெண் வீடியோ வெளியிட்டுள்ளார்.
ராஜண்ணா பகுதியைச் சேர்ந்த ஷாலினியும், அதே பகுதியைச் சேர்ந்த ஜானியும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இருவரையும் போலீசார் மீட்ட நிலையில், பெண்ணின் குடும்பத்தார் கொடுத்தப் புகாரில் மைனர் பெண்ணை கடத்தியதாக ஜானி மீது போலீசார் போக்சோ வழக்குப் பதிவு செய்தனர்.
ஓராண்டு கடந்த நிலையில், ஷாலினிக்கு வீட்டில் வேறொருவருடன் நிச்சயித்ததாகவும் அதனால், வீடு புகுந்து ஜானி கடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாலையும் கழுத்துமாக வீடியோ வெளியிட்டுள்ள ஷாலினி, தான் நலமாக இருப்பதாகவும், ஜானியை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இருவரது காதலை பெற்றோர் ஏற்றுக் கொள்ளாததால் இந்த முடிவை எடுத்ததாகவும், அதிகாலையில் முகமூடி அணிந்திருந்ததால் ஜானியை அடையாளம் காண முடியாமல் போனதாக ஷாலினி வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:2022இல் திரும்பிப் பார்க்க வைக்கும் கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் பின்னணி!