கௌகாத்தி:அஸ்ஸாம் மாநிலத்தில் செயல்பட்டுவரும் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றிவந்தவர் ஊடகவியலாளர் பரக் புயான். இவர் கடந்த மாதம் 11ஆம் தேதி இரவு சாலை விபத்தில் சிக்கினார். இவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அஸ்ஸாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுநரை கைது செய்தனர். இருப்பினும், இந்த வழக்கில் எந்தவொரு முடிவையும் காவல் துறை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என இந்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என யுனெஸ்கோ அறிவுறுத்தியுள்ளது. ஊடகவியலாளரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் அன்றிரவு யாரோ ஒருவரை சந்திக்கச் சென்றிருந்ததாகவும், அது குறித்த விசாரணையின் தகவல்கள் வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும் எனவும் அஸ்ஸாம் ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும், உண்மையான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்.
எனவே, யுனெஸ்கோ உலகெங்கிலும் உள்ள ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: பத்திரிகையாளர் பிரகாஷை கைது செய்யக் கோரி மனு!