கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதீக்சா 2030 என்ற பெயரில் உச்சி மாநாடு நடத்தப்பட்டது. அப்போது, மாநிலத்தை எப்படி வளர்ச்சி பாதையில் அழைத்து செல்வது என்பது குறித்து ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.
அதில் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துகொண்ட முன்னாள் பிரதமரும் பொருளாதார ஆய்வறிஞருமான மன்மோகன் சிங், பாஜக அரசின் தவறான கொள்கை முடிவான பணமதிப்பிழப்பால் அமைப்பு சாரா தொழில்கள் சீர்குலைந்து வேலையின்மை அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "கடன் பிரச்னையை பூசி மொழுக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல தற்காலிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இருப்பினும், பெரிய பிரச்னையாக மாறியுள்ள இது சிறு மற்றும் குறு தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
கேரளா உள்பட பல மாநிலங்களில் பொதுத்துறை நிறுவனங்களின் நிதிநிலை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதால் மாநில அரசு பெரிய அளவில் கடன் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால், வரும் காலங்களில் பட்ஜெட் பெரிய சுமையை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அரசியலமைப்பின்படி இந்திய பொருளாதாரமும், அரசியல் தத்துவமும் கூட்டாட்சியின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது உள்ள மத்திய அரசு அதனை பின்பற்றுவதில்லை. கேரளா சமூக அளவில் வளர்ச்சி அடைந்த போதிலும் மற்ற துறைகளின் மீது கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.