ஐஸ்வால்:மிசோரம்மாநிலத்தின் தலைநகரான ஐஸ்வால் பகுதியில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் சாய்ரங் பகுதி அருகே கட்டுமானப் பணியின்போது ரயில்வே பாலம் இடிந்து விழுந்தது. இன்று (ஆகஸ்ட் 23) காலை 10 மணி அளவில் ஏற்பட்ட இந்த விபத்தின்போது, 35 முதல் 40 தொழிலாளர்கள் வரை கட்டுமானப் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “இடிபாடுகளில் இருந்து 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் பலர் கண்டறியப்படவில்லை” என தெரிவித்தார். இந்த விபத்து குறித்து மிசோரம் மாநில முதலமைச்சர் ஸோரம்தங்கா அவரது அதிகாரப்பூர்வ X பக்கத்தில், “ஐஸ்வால் அருகே சாய்ராங்கில் கட்டுமானத்தில் இருந்த ரயில்வே மேம்பாலம் இன்று இடிந்து விழுந்தது. 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சம்பவத்தால் ஆழ்ந்த வருத்தமும், பாதிப்பும் அடைந்தேன். விபத்தில் இறந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன். மீட்புப் பணிகளுக்கு பெருமளவில் வந்து உதவிய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில், “மிசோரமில் பாலம் விபத்துக்குள்ளானது வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த விபத்து குறித்து மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவரது X சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், “மிசோரமில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் வருத்தமடைந்தேன். தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில நிர்வாகம் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். போர்க்கால அடிப்படையில் மீட்பு பணி நடைபெறுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம், கடுமையான காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், சிறு காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்” எனப் பதிவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: சந்திரயான்-3 திட்டத்தில் நாமக்கல் மண்ணின் பங்களிப்பு... புவியியல் நிபுணர் கூறிய சுவாரசிய தகவல்!