பாகல்பூர் :பீகாரில் கட்டுமான பணி நடந்து கொண்டு இருந்த பாலம் சீட்டு கட்டுபோல் நொடிப் பொழுதில் இடிந்து விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பீகார் மாநிலம் பாகல்பூர்- காகர்யா மாவட்டங்களுக்கு இடையே கங்கை நதியின் குறுக்கே ஆயிரத்து 717 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 வழிப் பாலம் கட்டமைப்பட்டு வந்தது. அகுவானி சுல்தான்கஞ்ச் கங்கா என்று அழைக்கப்படும் பாலத்தில் பெருவாரியான கட்டுமான பணிகள் நிறைவு பெற்று காணப்பட்டன.
இந்நிலையில், விரைவில் பாலம் திறக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், பாலத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தூண்கள் திடீரென இடிந்து விழுந்தது. சீட்டுக் கட்டுபோல பாலம் இடிந்து கங்கை நதியில் விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. பாலம் இடிந்து விழுந்த நேரத்தில் அந்த பகுதியில் பொது மக்கள் யாரும் இல்லை எனக் கூறப்படும் நிலையில், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாலம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் நிதிஷ் குமார் உத்தரவிட்டு உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் பிகாரில் ஏற்பட்ட புயலில் இந்த பாலம் சேதமடைந்ததாகவும், தொடர் சீரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் பாலம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை, எதிர்க்கட்சியான பாஜக கடுமையாக விமர்சித்து உள்ளது. பாலம் இடிந்து விழுந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பாஜக தலைவர் அமித் மால்வியா விமர்சித்து உள்ளார்.
பாலம் இடிந்து கங்கை நதியில் விழும் வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள அமித் மால்வியா, "கடந்த 2015ஆம் ஆண்டு முதலமைச்சர் நிதிஷ் குமார் அடிக்கல் நாட்டிய பாலம், கடந்த 2020ஆம் ஆண்டிற்குள் கட்டி முடித்து இருக்கப் பட வேண்டும். இரண்டாவது முறையாக இந்த பாலம் இடிந்து உள்ளது. இந்த சம்பவத்தில் நிதிஷ் குமாரும், தேஜஸ்வி யாதவும் உடனடியாக பதவி விலகுவார்களா? அதன் மூலம் மாமா, மருமகன் இருவரும் நாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்க முடியும்" என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
அதேபோல் பீகார் எதிர்க்கட்சித் தலைவர் விஜய் குமார் சின்ஹா, "இது போன்ற சம்பவங்களில் கமிஷன் அமைத்து விசாரணை நடத்துவது அரசியல் மரபு ஆகும். நிர்வாகத்தில் அராஜகமும், ஊழலும் இருப்பது பீகார் அரசியலில் நிலவும் ஸ்திரமின்மையற்ற சூழலை காட்டுகிறது. ஆனால் நிதிஷ் குமார் எதிர்க்கட்சி ஒற்றுமை குறித்து பேசி வருகிறார்" என்று பதிவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க :Odisha Train Accident : போப் பிரான்சிஸ், புதின், இம்மானுவேல் மேக்ரான் இரங்கல்!