கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் வரிசையில் தற்போது சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் ஆட்சியிலும், கட்சியிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல், சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ்.சிங் தியோ ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மனக்கசப்பு தற்போது அரசியல் பனிப்போராக மாறியுள்ளது.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் கமிட்டியின் இருபெரும் தலைவர்களான பூபேஷ் பாகேல், டி.எஸ்.சிங் தியோ ஆகியோரை ஒருங்கிணைத்த ராகுல் காந்தி, அவர்கள் இருவருக்கும் தலா 2.5 ஆண்டு காலம் முதலமைச்சர் பதவி எனும் எழுதப்படாத ஒப்பந்த அடைப்படையில் அங்கு ஆட்சியைத் தக்கவைத்தார். இந்நிலையில், காங்கிரஸ் அரசின் முதல் 2.5 ஆண்டு காலம் நிறைவடைய உள்ள சூழலில், இரண்டாம் பாதியில் டி.எஸ்.சிங் தியோவுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்று பரவலாக கூறப்பட்டு வந்தது.
நாடாளுமன்றத் தேர்தலில் தொடங்கி ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல் வரை தொடர் தோல்விகளைக் கண்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மேலிடம், இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடாததால் டி.எஸ்.சிங் தியோ ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக அறிய முடிகிறது. இந்த அதிருப்தி அண்மையில் நடைபெற்ற சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டத்திலும் எதிரொலித்தாக அறியமுடிகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாகேல், "முதலமைச்சர் பதவி மீது எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. நான் மக்களுக்காக பணியாற்ற விரும்புகிறேன். அதற்காக தான் இந்த பதவியில் அமர்ந்திருக்கிறேன். சிலருக்கு என் மீது அதிருப்தி இருப்பதாக நான் அறிகிறேன். கட்சியின் மேலிடம் உத்தரவிட்டால், நான் உடனடியாக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்" என்றார்.
பாகேலின் இந்த பேட்டி நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. பூபேஷ் பாகேலுக்கும், டி.எஸ்.சிங் தியோவுக்கும் இடையே ஏற்பட்ட பிளவு பற்றிய தகவல்கள் மீண்டும் பேசும் பொருளாகின.