தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மணிப்பூர் மாநிலத்தில் ஓயாத சண்டை.. மீண்டும் வன்முறை.. 4 பேர் படுகாயம்! - குக்கி சமூக மக்கள்

மணிப்பூரில் வன்முறையாளர்களை மத்திய அமைச்சர் அமித்ஷா எச்சரித்திருந்த நிலையில், இன்று மீண்டும் அங்கு வன்முறை வெடித்துள்ளது. கிளர்ச்சியாளர்கள் தாக்கியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Manipur
மணிப்பூர்

By

Published : Jun 2, 2023, 10:08 PM IST

தேஸ்பூர் (அசாம்):மணிப்பூர் மாநிலத்தில் வசிக்கும் மைத்தேயி சமூக மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் (ST) சேர்க்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதற்கு குக்கி சமூக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரு சமூக மக்களுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மணிப்பூரில் அசாதாரண சூழல் நிலவுகிறது. வன்முறையால் இதுவரை 98 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 310 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 4 நாள் பயணமாக மணிப்பூருக்கு சென்றார். சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், மைத்தேயி மற்றும் குக்கி சமூக மக்களிடம் கலந்துரையாடினார். ஆயுதம் வைத்திருப்பவர்கள் காவல்துறையிடம் சரணடைய வேண்டும் என்றும், தேடுதல் பணியின் போது போலீசாரிடம் சிக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார். அதன் அடிப்படையில் துப்பாக்கி உள்ளிட்ட 144 ஆயுதங்களுடன் சிலர் காவல்துறையிடம் சரணடைந்தனர். மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்று (ஜூன் 1) புறப்பட்டு சென்ற நிலையில், இம்பாலின் மேற்கு மாவட்டத்தில் இன்று (ஜூன் 2) மீண்டும் வன்முறை வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கங்க்சப் சிங்காங் கிராமத்துக்குள் அதிகாலை நேரத்தில் பயங்கர ஆயுதங்களுடன் குக்கி கிளர்ச்சியாளர்கள் புகுந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்த வீடுகளுக்கு அவர்கள் தீ வைக்க முயன்ற போது பொதுமக்கள் தடுக்க முயன்றதால் மீண்டும் மோதல் வெடித்தது.

குக்கி கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து நால்வரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அங்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படை வீரர்கள், கிளர்ச்சியாளர்களை சுற்றிவளைத்த நிலையில் இருதரப்பினர் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளதால், பதற்றம் தொடர்கிறது. இதற்கிடையே, மணிப்பூர் மாநிலத்தில் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள ராஜிவ் சிங், ஆளுநர் அனுசுயாவை சந்தித்தார். மாநிலத்தில் இயல்பு நிலை மற்றும் அமைதியை கொண்டு வருவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த, டிஜிபிக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

ஆளுநருடன் புதிய டிஜிபி ராஜிவ் சந்திப்பு

மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி சமூக மக்கள் 53 சதவீதம் பேர் வசித்து வருகின்றனர். இந்த சமூகத்தினர் தங்களை எஸ்.டி பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு குக்கி சமூக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எஸ்.டி பட்டியலில் மைத்தேயி சமூக மக்களை சேர்ப்பதால் அவர்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு கிடைக்கும் என குக்கி இன மக்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ள வன்முறையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகள் மற்றும் பொதுச்சொத்துக்கள் தீக்கிரையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Wrestlers Protest : மத்திய அரசுக்கு இறுதி எச்சரிக்கை... விவசாய சங்கங்கள் கெடு

ABOUT THE AUTHOR

...view details