டெல்லி:ரஷ்யா - உக்ரைனுக்கு இடையேயான போர் தொடங்கியதை அடுத்து உக்ரைனில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பமுடியாமல் தவித்து வந்தனர். இதனையடுத்து உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மீட்க “ஆப்ரேஷன் கங்கா” என்ற திட்டம் உருவாக்கப்பட்டது.
இதன் மூலம் நேற்று (பிப். 26) மாலை முதல் இந்திய மாணவர்கள் விமானங்களில் வந்தனர். இந்நிலையில், இன்று காலை உக்ரைனின் ஹங்கேரியிலிருந்து மூன்றாவது விமானம் இந்தியா வந்தடைந்தது. இதில் 240 மாணவர்கள் வந்திருந்தனர். இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆப்ரேஷன் கங்கா மூலம் இதுவரை 3 விமானங்கள் வந்துள்ளதாகத் தெரிவித்தார். முதலாவதாக, நேற்று மாலை டெல்லி வந்தடைந்த விமானத்தில் 219 மாணவர்களும், இரண்டாவதாக இன்று காலை மும்பை வந்த விமானத்தில் 240 மாணவர்களும் வந்துள்ளனர்.
உக்ரைனில் இருக்கும் மாணவர்களில் மொத்தம் 469 மாணவர்கள் திரும்பி உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், அவரது ட்விட்டர் பக்கத்தில் திரும்பியுள்ள மாணவர்கள் குறித்துப் பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். இதனையடுத்து உக்ரைனின் இந்திய தூதரகம் தொடர்ந்து இந்திய மாணவர்களைத் தொடர்புகொண்டு போர் குறித்த தகவல்களை அளித்து வருகிறது.