டெல்லி: வரும் ஏப்ரல் 26ஆம் தேதி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, அவர் சென்னைக்கு வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
போரிஸ் ஜான்சனின் சென்னை வருகை இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் அவரின் தமிழ்நாட்டு வருகை குறித்து திட்டமிடப்பட்டுவருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அதற்கு முன்பு, பிரிட்டன் குழு சென்னைக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அண்மையில், பேரிடர் மீட்பு உள்கட்டமைப்பு சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட போரிஸ், காலநிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட விவகாரங்களில் பிரதமர் மோடி சிறப்பாக செயல்பட்டதாக புகழாரம் சூட்டினார். அப்போது பேசிய அவர், "உலக நாடுகளுக்கான நிலையான எதிர்காலம் குறித்த ஒரே மாதிரியான தொலை நோக்குப் பார்வையை கொண்டுள்ளோம்.
எனது, இந்தியப் பயணத்தின்போது இது போன்ற விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசிக்க எதிர்நோக்கி காத்திக்கொண்டிருக்கிறேன்" என்றார். போரிஸ் ஜான்சனின் இந்தியப் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை.
முன்னதாக, குடியரசு தின அணிவகுப்பின் சிறப்பு விருந்தினராக போரிஸ் ஜான்சன் கலந்து கொள்ளவிருந்தார். ஆனால், கரோனா காரணமாக அவரின் பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.