அகமதாபாத்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார். தொடர்ந்து அவர் இந்திய-பசிபிக் பகுதியில் ஒத்துழைப்பு, சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தம், பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கிறார். மேலும், வளர்ந்து வரும் வணிகம் மற்றும் மக்கள் தொடர்பு குறித்தும் தொழிலதிபர்களுடன் விவாதிக்கிறார்.
குஜராத்தில் போரிஸ் ஜான்சன்: இந்தியாவின் ஐந்தாவது பெரிய மாநிலமான குஜராத்திற்கு இங்கிலாந்து பிரதமர் ஒருவர் அரசுமுறை பயணமாக வருவது இதுவே முதல் முறையாகும். தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (ஏப்.22) காலை, ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் சடங்கு வரவேற்பு நிகழ்ச்சியிலும், பின்னர் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மாலை அணிவிப்பதிலும் ஜான்சன் கலந்து கொள்கிறார்.
அன்றைய தினமே அவர் புது டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, இராஜதந்திர மற்றும் பொருளாதார கூட்டாண்மை குறித்து ஆழமான பேச்சுவார்த்தைகளை நடத்துவார்கள், இது நெருக்கமான கூட்டாண்மை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.