திருவனந்தபுரம்:கேரளத்தில் உள்ளாட்சி தேர்தல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. முதலமைச்சர் பினராயி விஜயன், வீடியோ கான்பரன்ஸிங் (காணொலி காட்சி) வாயிலாக மார்க்சிஸ்ட் கூட்டணி இடதுசாரி வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பினராயி விஜயன் கூறுகையில், “மத்தியில் ஆளும் அரசாங்கம் மற்ற பாஜக அல்லாத மற்ற அரசுகளை கவிழ்க பெரும்தொகையை செலவிடுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் விலைக்கு வாங்கப்படுகின்றனர்.
இடதுசாரிகள் கேரளத்தில் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் உள்ளனர்; நாங்கள் எந்த எம்.எல்.ஏ.,க்களையும் விலை கொடுத்து வாங்குவது போன்ற நாசவேலைகளில் ஈடுபட்டது கிடையாது.
ஆனால் புலனாய்வு அமைப்புகளை கொண்டு கேரளத்தில் மத்திய அரசு நாசவேலையில் ஈடுபடுகிறது. காங்கிரஸூம், முஸ்லிம் லீக் கட்சியும் பாஜகவுக்கு இரகசியமாக உதவுகின்றன.
ஆனால் நாங்கள் ஒரு சில வாக்குகளுக்காக மதவாத சக்திகளோடு கூட்டணி வைக்கவில்லை. நாட்டின் தலைநகரில் தற்போது என்ன நடக்கிறது? பொதுமக்களின் உரிமைகளை பறித்து, நசுக்கும் மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள், தொழிலாளர்கள் போராடுகின்றனர். இடதுசாரி ஜனநாயக முன்னணியினர் இவர்களின் கூட்டாளிகள்.