ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த டெய்லர் கன்ஹைய லால் ஜூன் 28ஆம் தேதி இரண்டு நபர்களால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித்தொடர்பாளர் நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கன்ஹைய லால் கருத்துப்பதிவு செய்ததால், அவர் கொலை செய்யப்பட்டதாகத் தெரியவந்தது.
இதையடுத்து கொலையாளிகள் ரியாஸ் அக்தாரி, கௌஸ் முகமது என்பவர்கள் வெளியிட்ட வீடியோவில், இந்த கொலையை தங்கள் செய்ததாக ஒப்புக் கொண்டும், பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்தும் பேசியிருந்தனர். இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.